மத்திய அரசின், 'சிப்பெட்' நிறுவனத்தில், டிப்ளமா படிப்புக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள, 'சிப்பெட்' என்ற, பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு, இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, டிப்ளமா படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
டிப்ளமா பிளாஸ்டிக் தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமா பிளாஸ்டிக் மோல்டிங் தொழில்நுட்பம் என, இரண்டு படிப்புகள், மூன்றாண்டு காலத்திற்கு நடத்தப்படுகின்றன. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.இதற்கான மாணவர் சேர்க்கைக்கான, தேசிய நுழைவு தேர்வு, ஜூலை, 7ல் நடத்தப்படுகிறது. விண்ணப்ப பதிவு, ஏப்.,18ல் துவங்கியுள்ளது. ஜூன், 30 வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவு தேர்வுக்கு பின், அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாக, சிப்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்கான விபரங்களை, https://eadmission.cipet.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.