Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 15, 2019

புதுவை மாநில கல்லூரிகளில் உள்ள பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுவை மாநில கல்லூரிகளில் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளுக்கு மாணவர்கள் புதன்கிழமை (மே 15) முதல் விண்ணப்பிக்கலாம் என புதுவை சென்டாக் அமைப்பின் தலைவரும், கல்வித் துறைச் செயலருமான அ.அன்பரசு கூறினார்.
புதுவை தலைமைச் செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான பொது கையேட்டை கல்வித் துறைச் செயலர் அ. அன்பரசு வெளியிட, சுகாதாரத் துறைச் செயலர் (பொ) எச்.டி.எஸ்.ஷ்ரன், உயர் கல்வித் துறை இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி.ருத்ரகவுடு, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மாணிக் தீபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் அ.அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயர் கல்விக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கும் நிலையை மாற்றி, சென்டாக் அமைப்பை ஏற்படுத்தி கடந்தாண்டு முதல் அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே குடையின் கீழ் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறையை ஏற்படுத்தினோம். நிகழாண்டு இதனை மேலும் மெருகூட்டி, தற்போது உயர் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளோம்.
அதன்படி, புதுவை மாநிலத்தில் இருக்கும் 22 கல்லூரிகளில் உள்ள பி.டெக். படிப்பில் 3,777 இடங்களும், இதில் 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான 627 இடங்களும், உயிரியல் தொடர்பான கால்நடை, வேளாண், செவிலியர், கேட்டரிங் படிப்புகளுக்கான 827 இடங்களும், துணை மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான 188 இடங்களும், கலை, அறிவியல் படிப்புகளுக்கான 4,648 இடங்களும், 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான 16 இடங்களும் உள்ளிட்ட மொத்தம் 10,651 இடங்கள் சென்டாக் தரவரிசை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்: மேற்கண்ட இடங்களுக்கு மாணவர்கள் புதன்கிழமை (மே 15) காலை 9 மணி முதல் வரும் 25-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 3-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான வரைவு பட்டியல் வெளியிடப்படும். இதில், ஏதேனும் குறைகள் இருந்தால், நிவர்த்தி செய்ய 2 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். தொடர்ந்து, ஜூன் 7-இல் முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, ஜூன் 10 முதல் 17-ஆம் தேதிக்குள் சேர்க்கை நடைபெறும். 19-ஆம் தேதி வரை விருப்பப்பாடங்களை மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.
இதையடுத்து, இரண்டாவது மற்றும் இறுதி தரவரிசை பட்டியல் ஜூன் 21-இல் வெளியிடப்படும். இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், ஜூன் 21-லிருந்து 28-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். ஜூலை 1-ஆம் தேதிக்கு மேல் மாப் - அப் முறையில் மீதமுள்ள இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பள்ளி, கல்லூரிகளில் உதவி மையங்கள்...: மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க புதுவை மாநிலத்தில் உள்ள 72 மேல்நிலைப் பள்ளிகள், 59 உயர்நிலைப் பள்ளிகளிலும், பாரதியார் பல்கலைக்கூடம், மதகடிப்பட்டு அரசு கலைக் கல்லூரி, வில்லியனூர் மகளிர் கலைக் கல்லூரி, தவளக்குப்பம் அரசு கலைக் கல்லூரி, தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளிலும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். இதற்காக உதவி மையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


பழைய சான்றிதழே போதும்...: நிகழாண்டு விண்ணப்பத்தில் பிளஸ் 2 தேர்வு எண்ணை குறிப்பிட்டாலே போதும். மதிப்பெண் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை. இதேபோல, வீண் அலைச்சலைக் குறைக்க மாணவர்கள் ஏற்கெனவே வருவாய்த் துறையின் மூலம் வாங்கி வைத்துள்ள ஒருங்கிணைந்த நிரந்தர இருப்பிடம், ஜாதி, வருமானச் சான்றிதழை விண்ணப்பத்தில் பதிவிட்டாலே போதும். நிகழாண்டு சான்றிதழை புதுப்பிக்காமல் இருந்தாலும், அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதே நேரத்தில் வரும் ஜூன் மாதத்துக்குள் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை மாணவர்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இருப்பிடச் சான்றிதழின் எண்ணை குறிப்பிட்டால் போதும் என்ற நிலையை கொண்டுவர இருக்கிறோம்.


குளறுபடிகள் இருக்காது...: மாணவர்களுக்கு மனஉளைச்சல் இல்லாமல், ஒளிவு மறைவற்ற நிலையில் உயர் கல்விக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு மாணவர் 100-க்கும் மேற்பட்ட விருப்பப் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும், கலை, அறிவியல் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் ஒரு மாணவர், பொறியியல் அல்லது மருத்துவப் பிரிவுக்கு விண்ணப்பிக்க இயலாது. கடந்தாண்டு சென்டாக் பட்டியலில் இடம் பெறாத மாணவர்கள், புதுவை கல்லூரிகளில் சேர்ந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.


உயர்கல்வி இடங்களை அதிகரிக்க நடவடிக்கை
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் அ.அன்பரசு கூறியதாவது: நிகழாண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால் அதிகமான மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்கேற்ற வகையில் கல்லூரியில் உள்ள இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்கள் அதிகம் விரும்பும் வணிகவியல், பொருளாதாரம், நிறுவன செயலர் உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். கடந்த மூன்றாண்டுகளை ஒப்பிடும்போது, நிகழாண்டு விரைவாகவே உயர் கல்வி இடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெளியிட நடவடிக்கை எடுப்போம்.


நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கையும், பாரதிதாசன் பல்கலைக்கூட கல்லூரியில் உள்ள கலை பிரிவுகளுக்கான சேர்க்கை அறிவிக்கையும் பின்னர் தனியாக வெளியிடப்படும். பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை ஏற்கெனவே உள்ள இடங்களை பறிக்காமல் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புதுவை கல்வித் துறையில் காலியாக உள்ள 50 பேராசிரியர்கள் பணியிடங்களை யுபிஎஸ்சி மூலமும், ஒப்பந்த முறையிலும் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Popular Feed

Recent Story

Featured News