அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூனில், 'பயோ மெட்ரிக்' பதிவு தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க, அடுத்த மாதம் முதல், 'பயோ மெட்ரிக்' திட்டம் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்கு, அரசு தரப்பில் நிதி வழங்கப்படுகிறது. தனியார் நிர்வாகத்தின் கீழ், அரசு உதவி பள்ளிகள் இருந்தாலும், அவற்றின் இயக்கத்துக்கு தேவையான அனைத்து செலவுகளையும் அரசே செய்கிறது. இருப்பினும், அரசு உதவி பெறும் பள்ளிகள் பலவற்றில், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவதில்லை. மேலும், பாடம் எடுக்கும் பணிகளை விட, பள்ளி நிர்வாக பணிகளுக்கே, அவர்கள் முக்கியத்துவம் தருவதால், மாணவர்கள் பாதிப்பதாக புகார்கள் உள்ளன.
அதனால், அரசு உதவி பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை குறைகிறது; தேர்ச்சி விகிதமும் பாதிக்கப்படுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க, பயோ மெட்ரிக் திட்டம் அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் பள்ளி கள் திறந்ததும், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. ஆசிரியர்களின் ஆதார் எண் அடிப்படையில், பயோ மெட்ரிக் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஆசிரியர்கள், தினமும் பள்ளிக்கு வரும் போதும், பள்ளியை விட்டு செல்லும் போதும், வருகை பதிவில் தங்கள் விரல் பதிவுகளை வைக்க வேண்டும்.
இடையில் அலுவலக பணி காரணமாக வெளியே சென்றாலும், அதற்கும், பயோ மெட்ரிக் பதிவு செய்ய, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, போலி கணக்கு காட்டுவது தவிர்க்கப்படும் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.