Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 22, 2019

கலை - அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படுமா?

பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுவதுபோல, கலை-அறிவியல் கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெற வேண்டும்.

இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாக, அண்ணா பல்கலைக்கழகக் குழு, ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளிலும் ஆய்வு நடத்தி, மாணவர்-பேராசிரியர் விகிதாச்சாரம், ஆய்வகங்கள், கணினி எண்ணிக்கை, பேராசிரியர் கல்வித் தகுதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்யும்.
அவ்வாறு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாத கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும். ஒவ்வோர் ஆண்டும் 70-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அதுபோல, 2019-20-ஆம் கல்வியாண்டில் உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டும் கலை-அறிவியல் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் இதுபோன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை.
இதன் காரணமாக, பல தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலே இயங்கி வருகின்றன. பாடத் திட்டமும் மேம்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில், கலை-அறிவியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர் கல்வியாளர்கள்.


இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறியது:
கலை-அறிவியல் கல்லூரிகள் புதிய படிப்புகளைத் தொடங்கும்போது, பல்கலைக்கழகக் குழு ஆய்வு நடத்தி முதல் ஆண்டுக்கான தற்காலிக அனுமதியை வழங்கும். பின்னர் இரண்டாம், மூன்றாம் ஆண்டிலும் ஆய்வு நடத்தப்படும்.
இந்த தொடர் மூன்று ஆய்வுகளுக்குப் பின்னர், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அந்தக் கல்லூரிகளில் பல்கலைக்கழகக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.
இவ்வாறு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வுக்குச் செல்லும்போதும், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு முன்கூட்டியே அறிவிக்கையும் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக, பல தனியார் கல்லூரிகள் ஆய்வின்போது மட்டும் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், இதர உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கு காட்டிவிட்டு, ஆய்வுக்குப் பின்னர் தரத்தை பின்பற்றுவதில்லை.


எனவே, பொறியியல் கல்லூரிகளுக்கு உள்ளதுபோன்று, ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கலை-அறிவியல் கல்லூரிகளில் திடீர் ஆய்வை பல்கலைக்கழகம் நடத்த வேண்டும். அப்போதுதான் தரத்தை மேம்படுத்த முடியும்.
மேலும், பல்கலைக்கழக பாடத் திட்டமும் 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அதையும் நவீன மேம்பாடுகளுக்கேற்ப, மாற்றியமைக்க வேண்டும் என்றனர்.


இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
பல்கலைக்கழக விதிகளின்படியே, கலை-அறிவியல் கல்லூரிகளில் இப்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும், ஒருசில சுயநிதி படிப்புகளை நடத்தும் தனியார் கல்லூரிகள் மீதுதான் உள்கட்டமைப்பு குறைபாடு தொடர்பான புகார்கள் வருகின்றன. எனவே, தேவைப்பட்டால் தொடர் ஆய்வு முறையை கொண்டு வருவது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசிக்கும் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News