Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 15, 2019

மாணவர்களே உஷார்.! பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி.!


தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்புகள் வசதிகள் அற்ற சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இந்தக் கல்லூரிகளில் இளநிலை பிரிவின் மாணவர் சேர்க்கையை 50 சதவிகிதமாகக் குறைத்தும், முதுநிலைப்பிரிவின் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதித்தும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.வசதிகளற்ற பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாடு உள்ளிட்டு நாடு முழுவதும் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைக் கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற வேண்டும். இதில், தமிழகத்தைப் பொருத்தவரை பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெறவேண்டும்.




பல்கலைக் குழு ஆய்வு

ஏஐசிடிஇ-யின் அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது அல்லது புதிதாகத் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகக் குழு ஆய்வில் ஈடுபடும். இந்த ஆய்வின்போது, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்கிறதா? ஆசிரியர் கல்வித் தகுதி, ஆய்வகம், கணினிகளின் எண்ணிக்கை, இணையதள வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம்.




அனுமதி முழுமையாக நிறுத்தம்

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். இந்த வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் குறைக்கப்படும். அல்லது அனுமதி முழுமையாக நிறுத்தப்படும்.


92 பொறியியல் கல்லூரிகள்



அதன்படி, 2019-20 -ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 பொறியியல் கல்லூரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது அண்ணா பல்கலைக் கழகம்.


287 பொறியியல் கல்லூரிகள்

முன்னதாக, 2019-20 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கல்லூரிகள் மூலம் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள் என மொத்தம் 3,523 படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் முதல்கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகளை உரிய முறையில் பூர்த்தி செய்த 287 பொறியியல் கல்லூரிகளில் 2,678 இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.




பூர்த்தி செய்யாத கல்லூரிகள்

உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல் கல்லூரிகளுக்கு அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது.


கண்டுகொள்ளாத கல்லூரிகள்

நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளின் 421 இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 92 பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம் வழங்கிய கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமலும், உரிய விளக்கமும் அளிக்காமலிருந்துள்ளது.




மாணவர் சேர்க்கை குறைப்பு

அவ்வாறு உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


முழுத் தடை



மேலும், குறிப்பிட்ட 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக் கழக ஆய்வுக் குழுவின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News