வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதால் உடனடியாக செல்போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ் அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது.
அந்த அளவிற்கு வாட்ஸ்அப்பின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹேக் செய்யப்பட வேண்டிய நபரின் செல்போனில் குறிப்பிட்ட சாப்ட்வேர் தானாகவே இன்ஸ்டால் ஆகும் என்று எச்சரித்துள்ளது.
இதன் மூலம் செல்போனில் உள்ள தகவல்கள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யக்கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. புதிய வாட்ஸ் அப் அப்டேட்டில் பாதுக்காப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.