உயிரீற்றுப் புணர்ச்சி
இரண்டு சொற்கள் இணையும்போது, நிலைமொழியின் ஈற்றெழுத்து உயிர் எழுத்தாக அமைந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிர் அல்லது மெய் இவற்றில் ஏதேனும் ஒன்று வந்து இணைவது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
இவ்வுயிரீற்றுப் புணர்ச்சி,
உயிர் + உயிர்
உயிர் + மெய்
என்ற வாய்வாட்டில் அமையும்.
உயிர்+உயிர் புணர்ச்சி
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் உயிராக அமைந்த இரண்டு சொற்கள் இணைவது உயிர் + உயிர் புணர்ச்சி எனப்படும்.
எ.கா. மணி + அழகு
என்ற சொற்களைச் சான்றாகக் கொள்ளலாம்.
இவ்விரு சொற்களில் மணி (மண்+இ) என்ற சொல்லின் ஈற்றில் இ என்ற உயிரும் அழகு என்ற சொல்லில் முதலில் அ என்ற உயிரும் வந்துள்ளதைக் காணலாம்.
இவ்வாறு நிலைமொழியின் ஈற்றிலும் வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வந்து சொற்கள் இணைவது உயிர்+உயிர் புணர்ச்சி எனப்படும். இப்புணர்ச்சியை உடம்படுமெய்ப் புணர்ச்சி என்றும் கூறுவர்.
உயிர்+மெய் புணர்ச்சி
நிலைமொழியின் ஈற்றெழுத்து உயிராகவும் வருமொழியின் முதல் எழுத்து மெய்யாகவும் அமைந்த சொற்கள் இணைவது உயிர்+மெய்ப் புணர்ச்சி எனப்படும்.
எ.கா. ஏரி+கரை
என்ற சொற்களைச் சான்றாகக் கொள்ளலாம்.
இவ்விரு சொற்களில் ஏரி என்ற சொல்லின் ஈற்றில் (ஏர்+இ) இ என்ற உயிரும் கரை (க்+அரை) என்ற சொல்லில் முதலில் க் என்ற மெய்யும் வந்துள்ளதைக் காணலாம்.
இவ்வாறு நிலைமொழியின் ஈற்றெழுத்து உயிராகவும் வருமொழியின் முதல் எழுத்து மெய்யாகவும் அமைந்த சொற்கள் இணைவது உயிர்+மெய்ப் புணர்ச்சி எனப்படும். மேற்கூறப்பட்ட உயிர்+உயிர், உயிர்+மெய் என்ற இருவகைப் புணர்ச்சியும் உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.