WATCH VIDEO AND CLICK DOWNLOAD
உடம்படுமெய்
நிலைமொழியின் ஈற்றிலும் வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வந்த இரு சொற்கள் இணையும்போது, அச்சொற்கள் இயல்பாக இணையாமல் விட்டிசைக்கும். அதாவது இடைவெளி விட்டு ஒலிக்கும்.
உதாரணமாக, மணி + அழகு என்ற இரு சொற்களை எடுத்துக்கொள்வோம்.
இவ்விரு சொற்களை உச்சரித்துப் பாருங்கள். இவை, மணி அழகு என தனித்தனிச் சொற்களாகவே ஒலிப்பதை உணரலாம்.
இவை இவ்வாறு ஒலிப்பதற்குக் காரணம், நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிர் எழுத்து வந்திருப்பதேயாகும்.
இவ்விரண்டு உயிர்களையும் இணைக்க வேண்டுமானால், இவ்விரு உயிர்களுக்கிடையில் ஒரு மெய்யெழுத்து நிற்றல் அவசியமானதாகும்.
நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்திற்கு உடம்படுமெய் என்று பெயர்.
உடம்படுமெய்யாக நன்னூலார் ய், வ் என்ற இரண்டினைக் குறிப்பிடுகிறார்.
மெய்யெழுத்துகள் பதினெட்டு இருக்க, இவ்விரண்டு மெய்களை மட்டும் உடம்படுமெய்யாகக் கொள்ளக் காரணம் என்ன என்பதை அறிதல் வேண்டும்.
இரண்டு நண்பர்கள் கருத்து வேறுபட்டு பிரிந்திருப்பார்களேயானால் அவ்விருவர்களையும் சேர்த்து வைக்க யாரை துணைக்கு அழைப்போம்.
அவ்விரண்டு நண்பர்களுக்கும் நெருக்கமான ஒரு நண்பனைத்தான் தேர்வு செய்வோம்.
அதைப்போலத்தான், உடம்படுமெய்யாக வரும் எழுத்து, மெய்யெழுத்தின் தன்மையும் உயிர் எழுத்தின் தன்மையும் பெற்றிருக்கவேண்டும்.
அப்படிப் பார்க்கப்போனால் பதினெட்டு மெய்யெழுத்துகளுள் ய்,வ் க்கு மட்டுமே இத்தகுதி உண்டு.
உடம்படுமெய்யாக வரும் ய், வ் என்ற இரண்டு மெய்யும், வடிவத்தால் மெய்யெழுத்தின் தன்மையும் உச்சரிப்பால் உயிரெழுத்தின் தன்மையும் பெற்றிருக்கிறது.
ஆகவேதான் ய், வ் என்ற மெய்களை உடம்படுமெய் என்றனர்.
இவ்விரு மெய்களும் எந்தெந்த உயிர் எழுத்துகளுக்கு அடுத்து வரவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
ய் உடம்படுமெய்
நிலைமொழியின் ஈற்றெழுத்தாக, இ, ஈ, ஐ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும்.
எ.கா
மணி + அடித்தது = மணியடித்தது. (இ)
தீ + எரிந்தது = தீயெரிந்தது. (ஈ)
வாழை + இலை = வாழையிலை. (ஐ)
வ் உடம்படுமெய்
நிலைமொழியின் ஈற்றெழுத்தாக, அ, ஆ, உ, ஊ, எ, ஒ, ஓ, ஔ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும்
எ.கா.
போன + இடம் போ + (ன்+அ)+ வ் + இடம் = போனவிடம் (அ)
அப்பா + உடன் அப்(ப்+ஆ) + வ் + உடன் = அப்பாவுடன் (ஆ)
பூ + ஆல் (ப்+ஊ) + வ் + ஆல் = பூவால் (ஊ)
ய், வ் உடம்படுமெய்
நிலைமொழியின் ஈற்றெழுத்தாக, ஏ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய், வ்) யகரம் வகரம் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.
எ.கா.
சே + அழகு = சேயழகு
சே + அழகு = சேவழகு
விதி.
இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும். -நன்னூல்-162