Friday, June 7, 2019

வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.25 விழுக்காடு குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ள ரிசர்வ் வங்கி இணைய வழிப் பணப் பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்க அறிவுறுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் புள்ளி இரண்டு ஐந்து அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.



ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி 5 சதவீதமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.

பணவீக்க விகிதம் நிதியாண்டின் முதல் பாதியில் 3 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 1 சதவீதமாகவும், இரண்டாவது பாதியில் 3 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 7 சதவீதமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

இணைய வழிப் பணப்பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்கியுள்ள ரிசர்வ் வங்கி, இதன் பலனை வங்கிகள் கடைநிலை நுகர்வோருக்கு சேர்க்க அறிவுறுத்தியுள்ளது.



2 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை வங்கி அலுவல் நேரங்களில் இணையதளம் மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்ற RTGS முறை பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக வங்கி வேலை நாட்களில் மாலை 4.30 மணி வரை ஆர்டிஜிஎஸ் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை ஆறு மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏ.டி.எம். கட்டணங்களை வரைமுறைப்படுத்த வங்கிகளின் தலைமைச் செயலதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இக்குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஏ.டி.எம் கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி வரைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News