தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் ஒரு வகுப்பறையில் யோகா பயிற்சி நடத்தப்படும் என்றும், இதற்காக 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை, நந்தனத்தில் நேற்று நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் ஒரு வகுப்பறையில் யோகா பயிற்சி நடத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கான நிதிகள் ஒதுக்குவதற்கும், அதற்கான பயிற்சியாளர்களை தேர்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் அதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள்.முதல்வர் ஒரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறபோது, பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அரசு பள்ளிகளை பொறுத்தவரை எங்கும் தண்ணீர் பிரச்னை இல்லை. செங்கல்பட்டில் தனியார் பள்ளியில் தண்ணீர் இல்லை என்று 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மூடப்பட்டது.
நாங்கள் உடனடியாக துறை அதிகாரிகளை அங்கே அனுப்பி பிரச்னையை சரி செய்துள்ளோம். பெற்றோர், ஆசிரியர் சங்கங்கத்தின் சார்பாக வேண்டிய குடிநீரை வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கழிப்பிடங்களில் சில இடங்களில் தண்ணீர் இல்லை என்று குறிப்பிட்டார்கள். அதையும் அரசு கூர்ந்து கவனித்து அந்த பணிகளை நிறைவேற்றி வருகிறது. பாடப்புத்தகத்தில் தவறு இருப்பது எல்லா இடத்திலும் ஏற்படும் ஒரு சிறிய குறைபாடுதான். அதை ஒரு பெரிய செய்தியாக எடுத்துக்கொள்ள கூடாது.
அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இதுவரையிலும் 102 கோடியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து இந்த பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.