Sunday, June 2, 2019

2032-க்குப் பிறகு கல்லூரிகளே பட்டங்களை வழங்கும் நடைமுறை: வரைவு கல்விக் கொள்கை-2019 வெளியீடு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை 2019-க்கான வரைவை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தரமான உயர் கல்வி, ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும், திட்டங்களும் இந்த வரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
இதில் குறிப்பாக, உயர் கல்வி நிறுவனங்களின் பணிச் சுமையைக் குறைத்து,

ஆராய்ச்சி, பிற கல்வித் திட்டங்களில் பல்கலைக்கழகங்கள் முழுக் கவனம் செலுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளன. அதன்படி, 2032-ஆம் ஆண்டுக்குப் பிறகு இணைப்பு பல்கலைக்கழக நடைமுறையே இருக்கப் போவதில்லை. அதாவது, பல்கலைக்கழகங்களின் கீழ் எந்தவொரு கல்லூரியும் இணைப்பு பெற்று இருக்காது.



பட்டங்கள் வழங்கும் பணி, கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கும் பணி என எதுவும் பல்கலைக்கழகங்களுக்கு இருக்காது.
மேலும், நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், கற்பித்தல் பல்கலைக்கழகம், கல்லூரிகள் என மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளன.

இதில் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களின் முதல் பணி தரமான ஆராய்ச்சியை மேம்படுத்துவதாக இருக்கும். அதனுடன் உயர்தர இளநிலை, முதுநிலை படிப்புகளையும் வழங்கும். இந்த வகை பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் முதல் கட்டமாக 100 எண்ணிக்கையில் தொடங்கப்படும்.

கற்பித்தல் பல்கலைக்கழகம் உயர்தர இளநிலை, முதுநிலை, பிஎச்.டி. படிப்புகளை வழங்கும். இந்த வகை பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் 500 எண்ணிக்கையில் தொடங்கப்படும். மூன்றாவது கல்வி நிறுவனமான கல்லூரிகள், தரமான இளநிலை, முதுநிலைப் படிப்புகளை வழங்கும்.



இந்த கல்லூரிகள் எந்தவொரு பல்கலைக்கழகங்களுக்குக் கீழும் வராது என்பதுடன், அவை அந்தந்தக் கல்லூரிகளின் பெயரிலேயே பட்டச் சான்றிதழ்களையும் வழங்கிக் கொள்ளலாம்.
மாவட்டத்துக்கு 2 கல்லூரிகள்:

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்கும் வகையில் ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு உயர்தர உயர் கல்வி நிறுவனமும், குறைந்தபட்சம் 2 அல்லது 3 கல்லூரிகளும் இடம்பெறச் செய்யப்படும்.
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனி அமைப்புகளில் தரமான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அவற்றுக்கு நிதி ஒதுக்கவும் தனி அதிகாரம் கொண்ட தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட உள்ளது.



இந்த அறக்கட்டளைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் அதாவது ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

இந்த அறக்கட்டளை, ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சித் திட்டங்களை வரவேற்று, தீவிர ஆய்வுக்குப் பிறகு நிதி ஒதுக்கீடு செய்யும்.
இந்த வரைவு கல்விக் கொள்கையை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது

Popular Feed

Recent Story

Featured News