Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 27, 2019

புதிய பாடத் திட்டத்தை படிக்க ஆண்டுக்கு 240 நாள்கள் தேவைப்படுகின்றன:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


மும்மொழி விவகாரத்தில் தமிழக அரசின் நிலையை விளக்கி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:-
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடத் திட்டங்களில் சிறப்பானது தமிழக பாடத் திட்டம்தான். இந்த பாடத் திட்டத்தை படிக்க ஆண்டுக்கு 240 நாள்கள் தேவைப்படுகின்றன.


பள்ளிகள் நடைபெறும் நாள்களோ 210 நாள்கள்தான். அதேசமயம், இயற்கைச் சூழ்நிலைகள் காரணமாக கடந்த ஆண்டு 192 நாள்கள் மட்டும்தான் பள்ளிகள் நடைபெற்றன.

இதனை மனதில் கொண்டுதான் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் முதல்கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதைக் கொண்டு அவர்கள் பாடங்களை கணினியிலேயே பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.
பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டுமென ஈரோட்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நான்காவது கட்டமாக அளிக்க முடிவு செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்காக போராட்டம் நடத்துவது வேதனைக்குரியது. முன்னாள் மாணவர்களுக்கு இப்போதே வழங்க வேண்டுமெனக் கூறுவது நியாயமற்றது.


பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் நியாயம்.
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக தனியார் பள்ளிகளை ஒரு வேளை மட்டுமே திறப்பதாக தகவல்கள் வந்தன.
தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்ய வேண்டுமென தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். அப்படி செய்யாத பள்ளிகள் குறித்து கவனத்துக்குக் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மும்மொழிக் கொள்கை: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி ஓரிரு நாள்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதவுள்ளார்.


புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாடங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து விளக்கம் கேட்டு அதனைத் தயாரித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் பெறப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Popular Feed

Recent Story

Featured News