Sunday, June 2, 2019

முதல் அரையாண்டில், 4 கட்டங்களில் அரசு தங்க கடன்பத்திரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு ஜூன் 3-ந் தேதி முதல் வரிசை ஆரம்பம்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், 4 கட்டங்களில் அரசு தங்க கடன்பத்திரங்களை வெளியிட பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஜூன் 3-ந் தேதி முதல் வரிசை ஆரம்பமாகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2015 நவம்பர் 5-ந் தேதி தங்க கடன்பத்திரங்கள் திட்டத்தை துவக்கி வைத்தார். உலோக வடிவிலான தங்கம் தேவைப்பாட்டை குறைக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி தங்க கடன்பத்திரங்களை வெளியிடுகிறது. முதலீட்டு நோக்கம் கொண்டவர்கள் உலோக வடிவில் தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக இந்த பத்திரங்களை வாங்கலாம். இந்த கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ஒரு கிராம் ஆகும்.

தனிநபர்கள் 4 கிலோ வரையிலும், இந்து கூட்டுக் குடும்பங்கள் 20 கிலோ வரையிலும் முதலீடு செய்ய முடியும். வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், சில குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்கள் மற்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் வாயிலாக இந்த கடன்பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தனிநபர்கள் உள்பட இந்து கூட்டுக்குடும்பங்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகிய இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் குடிமக்களுக்கு மட்டுமே அரசு தங்க கடன்பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். முதலீட்டு நேரத்தில் நிலவிய தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் வட்டி வழங்கப்படும். ரிசர்வ் வங்கி, நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) 4 கட்டங்களில் தங்க கடன்பத்திரங்கள் வெளியீட்டை மேற்கொள்ள இருக்கிறது. முதல் வரிசை ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது.

இரண்டாவது வரிசை ஜூலை 8-ந் தேதியும், மூன்றாவது வரிசை ஆகஸ்டு 5-ந் தேதியும் ஆரம்பமாகிறது. நான்காவது வரிசை செப்டம்பர் 9-ந் தேதி தொடங்க உள்ளது. முதலீட்டாளர்கள் அரசு தங்க கடன்பத்திரங்களை மின் ஆவணமாகவோ, காகித ஆவணமாகவோ வைத்துக் கொள்ளலாம். அரசு தங்க கடன்பத்திரங்கள் வெளியீட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை வெளியீட்டு விலையில் ரூ.50 தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. இச்சலுகை இனி வரும் வெளியீடுகளிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News