அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அந்த உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையல் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஒரே பதவியில் பணிபுரிந்து 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தலா ஒரு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு கடந்த 30.4.2015 அன்று உத்தரவிட்டது.
இந்த அரசு ஆணை வெளியிட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை. பெரும்பாலான அலுவலகங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் கண்ணன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: அங்கன்வாடிகளில் 10, 20, 30 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு தலா ஒரு ஊதிய உயர்வு வீதம் நிர்ணயம் செய்த நாளான 30.4.2015 தேதி முதல் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை பெற்று வழங்க வேண்டும்.
அரசாணை வெளியிட்ட 30.4.2015க்கு பின்னர் 10, 20, 30 ஆண்டுகள் நிறைவு செய்த வயது முதிர்வில் ஓய்வில் சென்ற, தன் விருப்ப ஓய்வில் சென்ற, மேற்பார்வையாளர் அல்லது மகளிர் ஊர் நல அலுவலராக பதவி உயர்வில் சென்ற, பல்நோக்கு சுகாதார செவிலியராக பணி மாற்றம் செய்யப்பட்ட அனைத்து தகுதியுள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கும் நிலுவைத் தொகைகளை பெற்று வழங்க வேண்டும். அரசு ஆணை வெளியிட்ட 30.4.2015க்கு பின்னர் 10, 20, 30 ஆண்டுகள் நிறைவு செய்து காலமான தகுதியுள்ள அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும் பெற்று வழங்க வேண்டும்.
30.4.2015க்கு பின்னர் புதிதாக 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு நிறைவு செய்த சமயத்திலேயே ஊதிய உயர்வு அனுமதித்து ஊதியப் பட்டியலில் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும்.
தகுதியுள்ள அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஊதியம் நிர்ணயம் செய்து அதனை 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மறு நிர்ணயம் செய்து நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.