இந்தியா உட்பட உலகம் முழுவதும் தற்போது உள்ள பெரிய பிரச்னை பிளாஸ்டிக் பயன்பாடு. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நிலத்தடி நீர் குறைவதுடன், பிற உயிரினங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனப் பல நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
இது இப்படி இருக்க மற்றொரு புறம் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான காரியமாகவே உள்ளது.
இவை இரண்டையும் சமாளிக்கும் வகையில் புதிய விஷயத்தைத் தயாரித்து ஆச்சர்யப்படவைத்துள்ளார் ஹைதரபாத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஒருவர்.
ஹைதரபாத்தைச் சேர்ந்த 45 வயதான சதீஷ் குமார் என்பவர்தான் இந்தத் தயாரிப்புக்குச் சொந்தக்காரர்.
பேராசிரியரான இவர் சிறு குறு தொழில் முனைவோராகவும் உள்ளார். இவர் பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள்களை தயாரித்து வருகிறார். வெப்பச் சிதைவு மூலம் வெறும் மூன்று படிநிலைகளில் பிளாஸ்டிக்கை எளிதாக எரிபொருளாக மாற்றிவிடுகிறார்.
இது பற்றி நியூஸ் 18 ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள அவர், ``மறு சுழற்சி செய்யாத பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை தயாரிக்க முடியும். 500 கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து 400 லிட்டர் பெட்ரோல் உருவாக்க முடியும்.
இந்த நடைமுறைக்குத் தண்ணீர் தேவையில்லை, இது சுற்றுச்சூழலையும் பாதிக்காது.
பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் இதைத் தயாரிக்கவில்லை சுற்றுச்சூழலுக்கு உதவி செய்வது மட்டுமே எங்கள் முதல் நோக்கம்.
தூய்மையான எதிர்காலத்தை உறுதிப் படுத்துவதற்கான சிறு முயற்சிதான் இது. ஆர்வமுள்ள எந்தத் தொழில்முனைவோருடனும் இணைந்து நாங்கள் இந்தப் பணியை செய்யத் தயாராக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் சுமார் 50 டன் பிளாஸ்டிக்கை இவர் எரிபொருளாக மாற்றியுள்ளார். சதீஷ் குமாரின் நிறுவனம் தினமும் 2 200 லிட்டர் பெட்ரோல் தயாரித்து, ஒரு லிட்டர் 40 முதல் 50 ரூபாய் வீதம் உள்ளூர் தொழில்முனைவோர்களுக்கு விற்றுவருகிறார். இருப்பினும் இந்த எரிபொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்துவது என்பது சோதனை அளவிலேயே உள்ளது
. பாலிவினைல் குளோரைடு (polyvinyl chloride) மற்றும் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (polyethylene terephthalate) தவிர அனைத்து வகையான பிளாஸ்டிக்களும், பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.