Friday, June 7, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 45 % மதிப்பெண் நிர்ணயம்

பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்ற எஸ்சி, எஸ்டி வகுப்பினர் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத அனுமதிக்கக்கோரிய வழக்கில், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவி தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிட்டது. அதில், எஸ்சி , எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45- சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய ஆசிரியர் கல்விக் கழக விதிப்படி, எஸ்சி , எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று, கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.

ஆனால் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்றவர்களே ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத இயலும். இதனால் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த பலர் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத இயலாத நிலை உள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்ற எஸ்சி, எஸ்டி வகுப்பினர் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனு, நீதிபதிகள் கே.ரவிசந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Popular Feed

Recent Story

Featured News