புதுதில்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று புதன்கிழமை (ஜூன் 5) காலை வெளியாகும் என காத்திருந்த நிலையில், மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரத்திற்கு முன்பாகவே, www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் நீட் நுழைவு தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. தேசிய தேர்வு முகமை.
தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்களில் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடை 9.01% சதவீதம் அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தில்லியில் 74.92% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.