மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால் 10,000 ரூபாய் அபராதம் ஆகிய புதிய சில மாற்றங்களுடன் மோட்டார் வாகன சட்ட மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் சிறிது மாற்றங்களை கொண்டு வந்து ஒரு புதிய மசோதாவை கடந்த ஆண்டு தயாரித்தனர். ஆனால் அமைச்சரவை கலைக்கப்பட்டதால், சட்ட மசோதாவும் காலாவதியானது.
இந்த மசோதாவிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவை. அதனால் இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னர் சட்டமாக இயற்றப்பட உள்ளது.
பழைய மசோதாவில் இடம்பெற்றிருந்த அபராதங்கள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கும், சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்வோருக்கும் 100 ரூபாயாக இருந்த அபராதம் 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 ரூபாயாக இருந்த அபராதம் தற்போது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்பட்ட பின்பும் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 2000 ரூபாயாக இருந்த அபராதம், தற்போது 5 மடங்கு உயர்ந்து 10,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தில் ஈடுபட்டால், வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படும்.
இறுதியாக சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தி பறந்து செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும், உரிமங்களை மீறி செயல்படும் கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த மசோதாவானது ஏற்கனவே மாநிலங்களவையில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போதும் காரசார விவாதங்களை உருவாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.