பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் 2019-20-ஆம் ஆண்டுக்கான பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கு 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வளாகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட உள்ளார்.
பட்டியல் வெளியிடப்பட்ட உடன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தரவரிசையை பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.
கலந்தாய்வு எப்போது?: பி.இ. தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் பார்வையிட்டு குறைபாடுகள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க நான்கு நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட உள்ளது. புகார்கள் எதுவும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தெரிவிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 25-இல் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஜூன் 27-ஆம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், ஜூன் 28-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 28 வரை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது