Sunday, June 2, 2019

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஜூன் 3-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் 33 துறைகளிலும், முனைவர் பட்டப் படிப்பில் 29 துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
மேற்கண்ட முதுநிலை பட்டப் படிப்புகள், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரிகளான மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகின்றன.


மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழக இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வேளாண் பட்டம், முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே முதுநிலை பட்டப் படிப்புக்கும், முனைவர் படிப்புகளுக்கும் தகுதியானவர்கள்.
மாணவர்கள் படிவங்களை பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
முதுநிலை பட்ட மேற்படிப்பு, முனைவர் படிப்புக்கான விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முதுநிலை படிப்புகளுக்கு ஜூலை 23-ஆம் தேதியும், முனைவர் படிப்புக்கு ஜூலை 30-ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, வகுப்புகள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கும்.


நுழைவுத் தேர்வானது கோவையில் நடைபெறும். இந்தத் தேர்வு 75 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். இரண்டு பாடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டரை மணி நேரம் தொடர்ந்து தேர்வு நடத்தப்படும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422- 6611261, 6611461 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, முதுநிலைப் பட்ட மேற்படிப்புப் பயிலகத்தின் முதன்மையரை நேரிலோ அணுகலாம்.

Popular Feed

Recent Story

Featured News