அங்கீகாரம் இல்லாத, 1,000 பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
'வரும் கல்வி ஆண்டுக்குள் அங்கீகாரம் பெறாவிட்டால் மூடப்படும்' என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 ஆயிரம் அரசு பள்ளிகள்; மற்றவை, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள்.
இவற்றில், ஏராளமான பள்ளிகள், எந்த வித அங்கீகாரமும் பெறாமல், இயங்கி வருவதாக புகார்கள் உள்ளன.பட்டியல்கடந்த கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு நெருங்கிய போது, அங்கீகாரம் இல்லாத பல பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் திணறினர்.
அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை உதவி செய்து, தேர்வை எழுத வைத்தது. இந்த பிரச்னை தொடராமல் இருக்க, மாநிலம் முழுவதும் உள்ள, அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு துவங்கியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளை மூட, நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
இதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட வாரியாக கணக்கெடுத்து, அவற்றை பள்ளிக் கல்வித் துறையிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், பட்டியலாக சமர்ப்பித்துள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் மட்டும் முதற்கட்டமாக, 28 பள்ளிகள், அங்கீகாரம் இன்றி செயல்படுவது தெரிய வந்துள்ளது.இன்னும் பல நர்சரி, பிரைமரி மற்றும் இளம் மழலையர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, நாமக்கல், திருப்பூர், மதுரை, கோவை என, ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நோட்டீஸ்
இதுவரை, 1,000 பள்ளிகள் வரை அங்கீகாரம் பெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது. சில பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்து விட்டு, அங்கீகாரம் வருவதற்குள் பள்ளிகளை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
இந்த பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.'வரும் கல்வி ஆண்டிற்குள் அங்கீகாரம் பெறாவிட்டால், பள்ளிகளை மூட, கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சரியான இட வசதி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை, எந்த அவகாசமும் இன்றி, உடனே மூட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அங்குள்ள மாணவர்களை, அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்