கற்பித்தல் துணைக் கருவிகள் இல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தக் கூடாது என்று முதுநிலை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுரை வழங்கிப் பேசினார். தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள புதிய பாடத் திட்டத்தை அனைத்து மாணவ, மாணவிகளிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், அனைத்து முதுநிலை ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஜூன் 18 முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை பாட வாரியாகவும், கல்வி மாவட்டங்கள் வாரியாகவும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் பேசியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் மாநில, தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான நீட், ஜெஇஇ, இதர போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வைக்க ஏதுவாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே க்யூ.ஆர். கோடு மூலம் விடியோ படங்களாகக் கற்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், இதைப் பயன்படுத்தி கல்வி கற்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும்.
100 மதிப்பெண்களில் சராசரியாக 60 சதவீதம் மதிப்பெண்கள் பெறத்தக்க வகையில் சிறந்த கற்பித்தல், உயர்ந்த அணுகுமுறைகளுடன் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். கற்பித்தல் துணைக் கருவிகளின்றி பாடம் நடத்தக்கூடாது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து வரும் ஆசிரியர்களுக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றார் அவர். இந்தப் பயிற்சி வகுப்பில் முதுநிலை பாட ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.