Join THAMIZHKADAL WhatsApp Groups
கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக, மனுதாரர் அளிக்கும் புகாரை, ஒரு வாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்த சுமிதா தாக்கல் செய்த மனு:
ஜூன் 23-ஆம் தேதி தமிழகத்தில் 119 மையங்களில் 814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் தேர்வை ஆசிரியர் தேவாணையம் நடத்தியது. இதில், இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில தேர்வு மையங்களில் தேர்வெழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. தேர்வு நடைபெற்ற பல மையங்களில் முறையான கண்காணிப்பு இல்லாததால், முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. கைபேசி பயன்படுத்தி தேர்வு எழுதுவது, அருகில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதுவது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதால், காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு முடிய வேண்டிய தேர்வானது மாலை 5 மணி வரை நடத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்தும் விடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று, முறையின்றி தேர்வு நடத்துவதால் கடினமாக படித்து தேர்வு எழுதுபவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, தகுதியற்றவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
இந்நிலையில் ஜூன் 24-ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், இணையசேவை பாதிக்கப்பட்டதால் தேர்வெழுத இயலாமல் போனவர்களுக்கு 2-ஆம் கட்டமாக ஜூன் 27-ஆம் தேதி 3 தேர்வு மையங்களுக்கு மட்டுமே மறுதேர்வு நடைபெறுவதாக கூறியுள்ளது. ஆனால் பல தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
அதோடு இரண்டு வகை வினாக்களுக்கு தேர்வு எழுதினால் தேர்வின் தரம் பாதிப்பதுடன், தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஆசிரியர் தேர்வாணையத்தின் அறிவிப்பாணையை முழுவதும் ரத்து செய்து அனைவருக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புதிதாக புகார் அளிக்கவும், அந்த புகாரை விசாரித்து ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.