பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் பணி தொடக்கம்எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பை பதிவை பள்ளியிலேயே செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை தாங்கள் படித்த பள்ளி வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வராமல் இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கடந்த 3 ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளி மூலம் வழங்கப்படுகிறது. எனவே கடந்த 3 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான 15 நாள்களுக்கும் ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி வருகிறது. இப்பணி அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுகிறது.
எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியை பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண் பெற்றவர்கள் அதனை எடுத்து வர வேண்டும்.
அந்த அட்டை எண் தெரியவில்லை எனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெறலாம். எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றுடன், சம்மந்தப்பட்ட பள்ளியை அணுகி வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளலாம்.