தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண விவரங்கள் தமிழக அரசின் இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரம் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய கட்டண விவரமானது, இன்று (ஜூன் 26) www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணங்களின் அடிப்படையில் தங்கள் மாவட்டத்திலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிக்கை அனுப்புமாறு தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதியன்று இதனைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கல்விக் கட்டணம் நிர்ணயிக்காத தனியார் பள்ளிகள் ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணயக் குழுவை நேரில் சந்தித்து புதிய கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ள அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.