புதுக்கோட்டை,ஜீன்.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகளுடன் அமைந்த 84 அங்கன்வாடி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள மையங்களில் ஆசிரியர்கள் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் தூண்டு கோலாக இருந்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது:நடுநிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் ஆசிரியர் விபரங்கள் மற்றும் கம்யூட்டர்களை தயார்நிலைகளில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.மாணவர் வருகைப்பதிவினை அன்றாடம் எமிஸ் இணையதள வருகைப்பதிவில் பதிவு செய்தல் வேண்டும். ஆசிரியர்கள் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு பெற்று சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.பேரிடர் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் பொருட்டு TN SMART செயலியை அனைத்து ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் பதிவேற்றம் செய்து பேரிடர் காலங்களில் வரக் கூடிய நிகழ்வுகளை அந்த செயலியின் வாயிலாக உடனுக்குடன் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.வட்டாரக் கல்வி அலுவலர்கள் அலைபேசியை எந்நேரமும் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் விபரங்களை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் ஒவ்வொரு நாளும் குறுந்தகவல் மூலம் அனுப்ப அறிவுறுத்த வேண்டும்.அரசு மாணவர்களுக்கு அறிவிக்கும் நலத்திட்டங்களை உடனுக்குடன் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு) இரா.சிவக்குமார்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்,கபிலன் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.