Sunday, June 2, 2019

ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும்'

ஊதியக்குழு முரண்பாட்டால், முதுகலை ஆசிரியர்களைவிட பட்டதாரி ஆசிரியர்கள் அதிகம் ஊதியம் பெறும் நிலை உள்ளது. இவற்றை களைவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல் எஸ்பிஎம் உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆ.ராமு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன், பொருளாளர் ஜெ.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழக அரசின் ஊதியக்குழுவின் பரிந்துரையால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பட்டதாரி ஆசிரியர்களை விட முதுகலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியத்தில் குறைவாக பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த முரண்பாட்டை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மாறுதல் கலந்தாய்வு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு இக்கலந்தாய்வில் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
மேல்நிலைப் பள்ளிகளில், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனியே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களுக்கான தொகுப்புப்படி வழங்கப்படவில்லை. இந்த தொகுப்புப்படியை ரத்து செய்து, விடுமுறை நாள்களுக்கும் சேர்த்து தினப்படி வழங்க வேண்டும்.


கடந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மேல்நிலைப் பாடத் திட்டத்தின்படி அரசு பொதுத் தேர்வு கேள்வித்தாள் வடிவமைப்பிலான புளூபிரிண்ட் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் மெதுவாக கற்கும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் உள்ளது போல் யூனிட் வெயிட்டேஜ் முறையில் கேள்வித்தாள் வடிவமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் மு.ரவிச்சந்திரன், மகளிரணி செயலாளர் ப.ஆனந்திமாலா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News