Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 21, 2019

நீட் தேர்வு தற்கொலைகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு


நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரங்கள், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள், இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலையைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீட் போன்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் அளிக்க வேண்டும் எனவும், தற்கொலை எண்ணத்தைப் போக்க மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், நீட் விவகாரத்தில் உயர்மன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியின் காரணமாக, திருப்பூரைச் சேர்ந்த ரீத்துஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா, தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷ்யா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசு உரிய பயிறசி வழங்கியிருந்தால், இந்த தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம். எனவே இதற்கு தமிழக அரசே காரணம். மேலும் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர், அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா, தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, விலைமதிப்பில்லாத மாணவ, மாணவிகளின் உயிரைக் காக்க அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்

Popular Feed

Recent Story

Featured News