புதுடில்லி: தகவல்கள் திருட்டு போன்ற விஷயங்களிலிருந்து, நாட்டைப் பாதுகாக்கும் வகையில், அரசுப் பணிகளுக்கு என, தனியாக, 'வாட்ஸ் ஆப், ஜி - மெயில்' போன்ற தகவல் தொடர்புகளை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.சமீப காலமாக, தகவல்கள் மற்றும் தரவுகளுக்கான பாதுகாப்புகள் உலகெங்கிலும் குறைந்து வருகின்றன. உதாரணமாக, அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த, 'ஹூவேய்' நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கையை எடுத்து, கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.
அமெரிக்காவின் தடையை தொடர்ந்து, சீனாவின் ஹூவேய் நிறுவனத்துடனான தொடர்புகளை, 'கூகுள், குவால்காம்' போன்ற நிறுவனங்கள் துண்டித்துள்ளன. காரணம், தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது தான்.அதேபோல், இந்தியாவில், '5ஜி' தொழில்நுட்பத்தை, ஹூவேய் அறிமுகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நாட்டின் தகவல்களை பாதுகாக்கும் முயற்சியின் ஒருகட்டமாக, அரசு துறை நிறுவனங்களுக்கு என, தனியாக தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.