கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த அரசு துவக்கப் பள்ளி ஒரு மாணவருக்காக தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான சின்னகல்லாறு, பெரியகல்லாறு எஸ்டேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்டுகளை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் அடர்ந்த வனப் பகுதிகள் ஆகும். இருப்பினும் அப்பகுதியில் கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்காக சின்னக்கல்லாறு மற்றும் பெரியகல்லாறு பகுதியில் மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை சார்பில் துவக்கப் பள்ளி தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
அப்பகுதியில், வன விலங்கு அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து, தற்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமே அங்கு வசித்து பணியாற்றி வருகின்றனர்.
இதனால், அங்கு செயல்பட்டு வந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறையத் துவங்கியது. இதில் சின்னக்கல்லாறு அரசு ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு மாணவர் சேர்க்கையும் இல்லாத காரணத்தால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த தலைமை
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இருவரை பள்ளிக் கல்வி நிர்வாகம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்தது.
அப்பகுதியில் தொழிலாளியாகப் பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவர் தனது மகனை பள்ளிக் கூடத்தில் படிக்க வைக்க விரும்பியுள்ளார். ஆனால், அங்கு செயல்பட்டு வந்த பள்ளிக் கூடம் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த மாணவனுக்காக மீண்டும் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை அதிகாரிகள் முதல் வகுப்பில் சேர விரும்பும் மாணவன் சிவா (5) படிப்பதற்காக மீண்டும் பள்ளியைத் திறக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து, ஜூன் 17 -ஆம் தேதி முதல் பெரியகல்லாறு அரசு நலப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சக்திவேலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு ஓராண்டாக மூடப்பட்டிருந்த சின்னக்கல்லாறு அரசு நல துவக்கப் பள்ளி திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது