மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.
இன்று வெளியீடு: இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை புதன்கிழமை (ஜூன் 5) வெளியிடுகிறது. இந்த முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.