என் மகனுக்கு 8 வயது. எப்போதும் மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனை மீட்பது எப்படி?'' - இன்றைக்கு, இந்தக் கேள்வியைக் கேட்காத பெற்றோர் உலகத்தில் யாருமே கிடையாது. அந்த அளவுக்கு இது உலகளாவிய பிரச்னையாகிவிட்டது. வேண்டுமானால், மகனுக்குப் பதிலாக மகள் என்று வரலாம். அல்லது 8 வயதுக்குப் பதிலாக 7 வயது அல்லது 9 வயது என்று இருக்கலாம். சரி, குழந்தைகளுக்கு முன்னால் நாம் மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருக்கலாம் என்றால், அது நிச்சயமாக முடியாது.
இன்றைய வேகமான யுகத்தில், ஸ்மார்ட்போனை மூன்றாவது கரம், இரண்டாவது மூளை என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அளவுக்கு அது நம்முடைய அலுவலக வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது. சரி, குழந்தைகளுக்குத் தெரியாமல் மொபைல் போனை ஒளித்து வைக்கலாம் என்றாலும், முடியாது. ஏனென்றால், ஸ்கூல் வாட்ஸ்அப் குரூப், கிளாஸ் வொர்க், ஹோம் வொர்க் என்று அவர்கள் தொடர்பான அத்தனை விஷயங்களும் செல்போனில்தான் வருகின்றன. ஸோ, செல்போனை குழந்தைகளிடம் கொடுக்கவும் வேண்டும்;
ஆனால், அவர்கள் அதற்கு அடிமையாகவும் கூடாது. என்னவொரு இக்கட்டான நிலைமை! பிரச்னையை அப்படியே குழந்தைகள் மன நல மருத்துவர் ஜெயந்தினி மற்றும் ஸ்கூல் கவுன்சிலர் திவ்யபிரபா இருவரிடமும் கொண்டுசென்றோம். படம்: மாடல் * உங்கள் பிள்ளை செல்போன் அடிமைதானா என்று செக் செய்யுங்கள்! காலையில் எழுந்தவுடனே செல்போனைத் தேடுவது, பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவுடனே செல்போன் கேமுடன் உட்கார்ந்துகொள்வது, போன் தரவில்லையென்றால் அளவுக்கதிகமாகக் கோபப்படுவது, நேரம் போவது தெரியாமல் போனைப் பார்த்துக்கொண்டே இருப்பது,
அவனுடைய/அவளுடைய தினசரி செயல்களே செய்யப்படாமல் கிடப்பது, வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது, சரியாகப் படிக்காமல் இருப்பது என இத்தனை பிரச்னைகளும் இருக்கின்றன என்றால், உங்கள் பிள்ளை செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறான்/ள் என்று அர்த்தம். ஜஸ்ட் அரைமணி நேரம் செல்போனில் கேம் விளையாடுவதை எல்லாம் அடிக்ஷன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
வேர்க்காரணத்தைக் கண்டுபிடியுங்கள்! இன்றைக்கு பல பெற்றோர்கள், பிள்ளை தன்னை தொல்லைபண்ணக் கூடாது என்பதற்காகவே செல்போனை கொடுத்து பழக்கிவிட்டார்கள். இதுவொரு வேர்க்காரணம்.
அடுத்து, தனிமையாக உணர்கிற குழந்தைகளும் செல்போனுக்கு அடிக்ட் ஆகிவிடுகிறார்கள் அல்லது வீட்டில் அவர்களுக்கு சமமாக விளையாட யாருமில்லாதபோது, இப்படி செல்போனே கதியென்று ஆகிவிடுகிறார்கள். காரணத்தைக் கண்டுபிடித்து, சரிசெய்யுங்கள். எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் ஈடுபடுத்துங்கள்! உங்கள் பிள்ளைக்கு பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ் என்று எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை கண்டறிந்து, அந்தப் பயிற்சியில் சேர்த்துவிடுங்கள். டைம் லிமிட் வையுங்கள்! பிள்ளையின் சிறு வயதிலிருந்து செல்போனை விளையாடக் கொடுத்த பெற்றோர் என்றால், முதலில் அதற்கு ஒரு டைம் லிமிட் வையுங்கள். 'நீ செல்போன் பாரு; விளையாடு. ஆனா, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் மட்டும் விளையாடு. அதற்கு மேல் கேட்டால், செல்போனே கொடுக்க மாட்டேன்' என்று லேசாக அச்சுறுத்துங்கள். தரவே மாட்டேன் என்றால், உங்களுக்குத் தெரியாமல் எடுப்பார்கள், கவனம்.
* பயமுறுத்தலாம் தப்பில்லை! தினமும் ரொம்ப நேரம் செல்போன் பார்த்தால், கண் பார்வை மங்க ஆரம்பிக்கும். (இது உண்மையும்கூட) அதனால், பள்ளிக்கூடத்தில் பிளாக் போர்ட்டில் மிஸ் எழுதுவது தெரியாமல் போகலாம் என்று பயமுறுத்துங்கள். 'அச்சச்சோ... பிள்ளைக்கு கண்ணு தெரியாம போகும்னு நானே எப்படி சொல்றது டாக்டர்' என்று பதற்றப்படாதீர்கள். நெருப்பென்றால் வாய் சுட்டுவிடாது. தவிர, பிள்ளைகளின் நன்மைக்காகத்தானே இப்படியொரு வார்த்தையைச் சொல்கிறீர்கள்... அதனால், தைரியமாகப் பயமுறுத்துங்கள். அழுகையோ அடமோ... கண்டுக்கொள்ளாதீர்கள்! சில பிள்ளைகள், 'விளையாடுறதுக்கு நீ செல்போன் கொடுக்கலைன்னா நான் சாப்பிட மாட்டேன்' என்று அடம்பிடிப்பார்கள் அல்லது அழுவார்கள். அழட்டும், அடம்பிடிக்கட்டும். எவ்வளவு நேரம் அவர்களால் அழ முடியும் அல்லது அடம்பிடிக்க முடியும். அரைமணி நேரத்தில் ஓய்ந்துபோவார்கள். அதன்பிறகு வேண்டுமானால், 'இந்தா அரை மணி மட்டும் பார்த்துக்கோ' என்று சொல்லி போனை கொடுங்கள்.
அடம்பிடித்து போனை வாங்க முடியாது. அம்மாவாக பார்த்துக்கொடுத்தால்தான் உண்டு என்பதை அவர்களுடைய மனத்தில் பதியவையுங்கள். தவிர, 10 வயதுக்குள்தான் இப்படிக் கண்டித்து பிள்ளைகளை உங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும். அதற்கு மேல் கடினம் என்பதால், இப்போதே சாம, தான, பேத, தண்டம் என எல்லாவற்றையும் முயற்சிசெய்துவிடுங்கள். வீட்டுப்பாடம் செய்தால்தான் கொடுப்பேன்! பள்ளிக்கூடம் விட்டு வீடு வந்ததும், ஃபிரஷ்ஷாவது, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, விளையாடுவது, ஓய்வெடுப்பது, படிப்பது அல்லது டியூஷன் போவது என்று எல்லாவற்றையும் சரியாகச் செய்த பிறகு, சிறிது நேரம் போனிலும் விளையாட அனுமதியுங்கள். அம்மாவே நமக்கு விளையாடுவதற்கு போன் கொடுப்பார் என்பது அவர்கள் மனதில் பதிவானால், அதனிடம் அடிமையாக மாட்டார்கள். * செல்போனுடன் நீங்களும் பக்கத்தில் இருங்கள்! பிள்ளைகளிடம் செல்போன் கொடுக்கும்போது, நீங்களும் அவர்களுடன் உட்கார்ந்துகொள்ளுங்கள்.
'இன்னிக்கு அம்மா மொபைல்ல இந்த வீடியோ பார்த்தேன். நீயும் பாரேன். என்ஜாய் பண்ணுவே' என்று சொல்லி, ஒரு நல்ல விஷயத்தை பிள்ளைக்கு போன் வழியாகவே சொல்லிக் கொடுத்துவிடலாம். குழந்தைகள் செல்போன் பார்ப்பதில் இது பாசிட்டிவ் வகை என்றே சொல்லலாம். படம்: மாடல் * இது தவிர்க்க முடியாது. ஆனால்... நாமெல்லோரும் எலெக்ட்ரானிக் உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால், நம் குழந்தைகளுக்கு கேட்ஜெட்டுகளை எப்படி இயக்க வேண்டுமென்பது கட்டாயம் தெரிய வேண்டும். நாமெல்லாம் சிட்டிசன்களாக வளர்ந்தோம். நம் பிள்ளைகள் நெட்டிசன்களாக வளர்கிறார்கள். இது கால மாற்றம். அதனால், செல்போனை நம் பிள்ளைகளிடம் இருந்து மொத்தமாகப் பிரிக்க நினைப்பது சரியில்லை.
அதற்குப் பதிலாக, அதில் அவர்களுக்குத் தேவையான விஷயங்களைப் பார்க்கவையுங்கள்; தெரிந்துகொள்ள வையுங்கள். ஸ்மார்ட்போன் வழியாக பிள்ளைகளின் உலகத்தைப் பரந்ததாக மாற்றுங்கள். அதே நேரம், அவர்களையும் அறியாமல் மொபைல் பார்க்கும் நேரத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். நீங்கள் கொடுக்க மாட்டேன் என்று சொல்லச் சொல்லத்தான், செல்போன் மேல் பிள்ளைகளின் ஆர்வம் அதிகமாகும் என்கிற உளவியலையும் மறக்காதீர்கள்.