பேஸ்புக்' நிறுவனத்தின், சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் உள்ள பிரச்னையை கண்டுபிடித்து, அதற்கு தீர்வு அளித்த, கேரள வாலிபருக்கு, பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது.
இங்கே, ஆலப்புழாவைச் சேர்ந்த, கே.எஸ். அனந்தகிருஷ்ணா, 19, என்ற மாணவர், அங்குள்ள கல்லுாரியில், இன்ஜினியரிங் படித்து வருகிறார். பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான, வாடஸ்ஆப் சமூக வலைதளத்தில் உள்ள, ஒரு பிரச்னையை, அவர் கண்டுபிடித்தார்.
இந்த பிரச்னையின் மூலம், ஒருவருக்கு தெரியாமல், அவருடைய மொபைல்போனில் உள்ள, அனைத்து தகவலையும் அழிக்க முடியும்.
இந்த பிரச்னையைக் கண்டுபிடித்ததுடன், அதற்கான தீர்வையும், பேஸ்புக் நிறுவனத்துக்கு, அனந்த கிருஷ்ணா தெரிவித்தார். அதையடுத்து, அந்தப் பிரச்னை சீர் செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக பரிசோதிக்கப்பட்டது.
மிகவும் சிக்கலான பிரச்னையை கண்டுபிடித்ததுடன், அதற்கு தீர்வும் அளித்த, அந்த இளைஞருக்கு, பேஸ்புக் நிறுவனம், 34 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது. இதைத் தவிர, நிறுவனத்தின் முக்கிய நபர்கள் பட்டியலிலும், அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் மென்பொருள் படித்து வரும், அனந்தகிருஷ்ணா, கேரள போலீசின், 'சைபர் கிரைம்' பிரிவுக்கும், உதவி செய்து வருகிறார்.