கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நிலைமையைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சுகாதாரத் துறை உயரதிகாரிகள் அடங்கிய 4 குழுக்கள் அப்பகுதிகளுக்கு வியாழக்கிழமை அனுப்பப்படவுள்ளன.
இதனிடையே, தமிழகத்தில் எவருக்கேனும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அதற்குரிய சிகிச்சையளிப்பதற்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது ரத்த மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேயிலுள்ள தேசிய வைரஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை அந்த ஆய்வு மையம் உறுதி செய்தது.
கேரளத்தில் இருந்து நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்துக்கும், இங்கிருந்து பலர் அந்த மாநிலத்துக்கும் சென்று வருகின்றனர். இதனால், தமிழகத்துக்குள் அந்த வைரஸ் பாதிப்பு பரவிவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் புதன்கிழமை விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நிபா வைரûஸத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக சுகாதாரத் துறையினருக்கும், கால்நடைத் துறையினருக்கும் அதுகுறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை ஏற்கெனவே அனுப்பியுள்ளோம்.
தொற்றுநோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான சிறப்பு வார்டுகள், மருத்துவ வசதிகள் அனைத்துமே தமிழகத்தில் உள்ளன. தற்போது நிபா வைரஸ் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு வார்டுகளை தயார்நிலையில் வைத்துள்ளோம்.
கேரளத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேல் தலைமையிலான குழவினர் வியாழக்கிழமை அப்பகுதிகளுக்குச் செல்கின்றனர். அந்த மாவட்டங்கள் அனைத்திலும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இரு மாநில எல்லையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, நிபா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.குறிப்பிட்ட பகுதியில் அதிக அளவில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதற்குரிய சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ உதவிகளுக்கு 104, 044- 24334811, 044 - 24350496 ஆகிய மூன்று எண்களிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளவால் கடித்த பழங்கள் மூலமாக அந்த வைரஸ் பரவும் என்பதால், பழங்களை நன்கு கழுவி உண்ணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.