புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கான டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்: மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை,ஜீன்.21: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி வழங்கினார்.
பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் துவக்கி வைக்க உள்ளார்கள்.இக்கல்வித் தொலைக்காட்சியில் 38 வகையான நிகழ்ச்சிகள் தொடர்ந்து 24 நேரமும் ஒளிபரப்ப படவுள்ளது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக கல்வித் தொலைக்காட்சி சேனலை காணும் வகையில் 218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் திரையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தினமும் ஒரு திருக்குறள் பற்றி விளக்கவுரையுடன் வழங்கப்படும் குறளின் குரல்,கல்வி சார்ந்த அறிவிப்புகள்,கற்றல் கற்பித்தல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படவுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.எனவே மாணவர்கள் இக்கல்வித் தொலைக்காட்சியினை கண்டுகளித்து சிறந்த முறையில் கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கபிலன்,அரசு கேபிள் டிவி வட்டாச்சியர் ஜெயசித்ரகலா,கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.