Saturday, June 1, 2019

ஆதார் அட்டை தொலைந்துவிட்டதா.. கவலை வேண்டாம்.. ஈஸியா புதுசு வாங்கிடலாம்!


சென்னை: ஆதார் அட்டை தொலைந்து விட்டால் புதிய ஆதார் அட்டை, பதிவு செய்யப்பட செல்போன் எண் இல்லாமலே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிஜினல் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அல்லது சேதம் அடைந்து விட்டால் புதிய ஆதார் அட்டை பெறவேண்டும் என்றால் இதுவரை பதிவு செய்யப்பட்ட செல் போன் எண் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை இருந்து வந்தது. இனிமேல் செல் போன் எண் இல்லாமலே புதிய ஆதார் அட்டை பெற முடியும் என்று இந்திய தனி அடையாள ஆணையம் தகவல் தெரித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டுமுதல், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது.


மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூகநல திட்டங்களை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இப்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் நாம் நம்மை இன்னார் என்று கூறுவதற்கு சான்றாகவும் ஆதாரே கேட்கப்படுகிறது.
இந்த ஆதார் பதிவு ஆதார் அட்டை வழங்குதல் போன்ற பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 7 கோடியே 45 லட்சம் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஆதார் கட்டாயமில்லை என்று கூறியிருந்தாலும் சில இடங்களில் நமது இல்லத்தில் கூட நாமும் அந்த வீட்டில்தான் வசிக்கிறோம் என்று நிரூபிக்க ஆதார் கேட்கும் அளவுக்கு எங்கும் ஆதார் எதிலும் ஆதார் என்ற நிலை வந்துவிட்டது.
இப்படி நம் வாழ்வில் வெகு முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆதார் அட்டையை நாம் எப்போதும் பிரியாமல் எங்கு சென்றாலும் கொண்டே செல்வோம். இதில் அந்த அட்டை தொலைந்தோ, அல்லது கிழிந்தோ, அல்லது சேதமடைந்தோ போயிருக்க கூடும். இப்படிப்பட்ட நிலையில் நாம் புதிய அட்டையை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.


இதற்காகவே ஏ.டி.எம். அட்டை வடிவில் புதிய அட்டைகள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த அட்டையில் உள்ள கியூ ஆர் கோடை சரியாக படிக்க முடியாத நிலை இருந்ததால் அந்த ஏ.டி.எம் வைடிவிலான அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இப்போது முன்னர் வழங்கப்பட்டது போன்று நீளமான அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் புதிய அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையே தொடர்கிறது.
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் நாம் ஆதார் அட்டை பெறும்போது நமது செல்போன் எண்ணை கொடுத்திருப்போம். பின்னர் காலப்போக்கில் கடன்காரனுக்கு பயந்தோ அல்லது ரசிக பெருமக்களின் அன்புத் தொல்லை காரணமாகவோ அல்லது எதோ ஒரு காரணத்துக்காகவோ அந்த எண்ணை மாற்ற வேண்டிய சூழல் வந்திருக்கும் நாமும் அந்த எண்ணை தூக்கி கடாசிவிட்டு புதிய எண்ணை பயன்படுத்தி வருவோம்.
பின்னர் ஒரு சுபயோக சுப தினத்தில் நம்முடைய அடையாளமான ஆதார் அட்டை தொலைந்து போயிருக்கும். சரி வேறு அட்டை பெறலாம் என்று முயற்சிக்கும்போது உங்கள் பதிவு செய்யப்பட செல்போன் எண்ணுக்கு வந்துள்ள OTP எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கேட்கும். அந்த OTP எண்ணை பதிவு செய்தால் மட்டுமே மாற்று அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முழுமை அடையும். அப்படி விண்ணப்பம் முழுமை அடையாமல் இருக்கும்போதுதான் நமக்கு ஞானம் வரும். அய்யயோ அந்த செல்போன் எண்ணை மாற்றித் தொலைத்து விட்டோமே என்று.


இப்படிப்பட்ட சிக்கல்களை தவிர்க்க யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனி அடையாள ஆணையம் இப்போது ஒரு வழி கூறியுள்ளது. அதாவது இனிமேல் மாற்று அட்டை கேட்டு விண்ணப்பிக்கும்போது செல்போனுக்கு OTP எண் வராது. மாறாக புதிய அட்டை வேண்டுவோர் www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (Pilot Basis) என்ற பகுதியை கிளிக் செய்து, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும் புதிய ஆதார் அட்டை, அந்த அட்டையில் இடம்பெற்றுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சலில் வந்து சேரும். இப்படி புதிய அட்டை பெற ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்த வசதியின் மூலம் அட்டைதாரர் மட்டுமல்லாது யார் வேண்டும் என்றாலும் யாருக்காகவும் புதிய அட்டை கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால் அந்த அட்டையில் எந்த முகவரி கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த முகவரிக்கு மட்டுமே புதிய அசல் ஆதார் அட்டை விரைவு தபால் மூலம் வந்து சேரும்.

Popular Feed

Recent Story

Featured News