வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட்டனர்.
மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் தற்போது 111 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இச்சூழலில், இந்த ஊரைச் சேர்ந்த பிற மாணவர்கள் உயர்கல்விக்காக 6 கி.மீ தொலைவில் உள்ள மணப்பாறை மற்றும் இளங்காகுறிச்சிக்கு சென்று வருகின்றனர். ஆனால், பள்ளி செல்ல முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை எனக் கூறியுள்ள பண்ணப்பட்டி கிராம மக்கள், தங்கள் ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதன் மூலம், பண்ணப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நத்தம்புதூர், மூரம்பட்டி, மேல் ஈச்சம்பட்டி, கீழ் ஈச்சம்பட்டி, அமயபுரம், ஊத்துப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வியை பண்ணப்பட்டியிலேயே பயில முடியும் என்று கூறுகின்றனர். நீண்ட நாள்களாக இக்கோரிக்கையை முன்வைத்தும், அரசு அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியதுடன், திங்கள்கிழமை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குள் செல்ல விடாமல் தடுத்து, வகுப்புகளைப் புறக்கணிக்க வைத்தனர். மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றியம், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் புத்தாநத்தம் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக ஆவண செய்வதற்காக அதிகாரிகள் 15 நாள்கள் அவகாசம் கோரினர்.
இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.கோடை விடுமுறைக்குப் பின், பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.