Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 6, 2019

ஏழ்மை நிலை; தமிழ்க் கல்வி; அப்துல் கலாம் மீது ஈர்ப்பு - சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்கு தேனி மாணவி தேர்வு


வீட்டில் விளக்கு இல்லாமல் படித்து முதலிடம், ஏழ்மையிலும் சாதனை. இப்படி பல மாணவர்கள் தங்களின் தனித் திறமையால் உயர்ந்த பல கதைகளை நாம் கேட்டிருப்போம். இவர்களின் வரிசையில் தேனியைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகாவும் தனித்து விளங்கி, பெரும் சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர், உதயகீர்த்திகா. இவரின் தந்தை தாமோதரன் எழுத்தாளராக உள்ளார்.


அல்லிநகரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் ஈர்க்கப்பட்டு, இவருக்கும் விஞ்ஞான ஆசை வந்துள்ளது. ஏழ்மைநிலையில் மிகவும் சிரமப்பட்டே தன் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். 2012-ம் ஆண்டு, மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டு, அதே போன்ற மற்றொரு போட்டியிலும் முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளார்.



இவரின் கட்டுரையைக் கண்டு வியந்த ஆய்வாளர்கள், கீர்த்திகாவை விண்வெளி ஆராய்ச்சி படிக்கும்படி ஊக்கப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் கீர்த்திகாவுக்கு விண்வெளி ஆராய்ச்சியின் மீதான ஆசையை மேலும் தூண்டியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான மேல் படிப்பைத் தொடர்வதற்காகப் பணம் இல்லாமல் தவித்துள்ளார். பின்னர், தன் தந்தையுடன் சேர்ந்து அல்லிநகரம் முழுவதும் தெரிந்தவர்களின் உதவியைப் பெற்று, உக்ரைனில் உள்ள கார்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் சேர்ந்துள்ளார். அங்கும் சிறந்து படித்து 90-க்கும் அதிகமாக சதவிகிதத்தில் தேர்ச்சிபெற்றுள்ளார்.
இதையடுத்து, கீர்த்திகாவுக்கு போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில், பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சிபெறவும், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் 20 மாணவர்கள் இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில், இந்தியாவிலிருந்து கீர்த்திகா மட்டும் செல்கிறார். இதுபற்றி பேசிய கீர்த்திகா, " இதுவரை இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரண்டு பெண்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அமெரிக்காவின் நாசாவில் இருந்துதான் சென்றனர்.
நானும் அவர்களைப் போல் விண்வெளிக்குச் செல்ல வேண்டும். ஆனால், எனக்கு இந்தியாவின் இஸ்ரோ தளத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. அதுவே என் லட்சியம்" என்று கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News