`சாப்பிடும்போது, தண்ணீர் குடித்தால், தேவையான அளவு பசி எடுக்காமல் போய்விடும்'
`சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால், சீக்கிரமா வயிறு நிறைந்த உணர்வு வந்துவிடும். அதனால் போதுமான அளவு சாப்பிட முடியாத சூழல் உருவாகும்'
`சாப்பிட்டு முடித்த உடனேயே, தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை வரலாம்'
- இப்படியாக உணவுக்கும் தண்ணீருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஏகப்பட்ட நம்பிக்கைகளும், அதுகுறித்த சில முரண்களும் கடந்த சில மாதங்களாக, சமூகவலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் இதில் எதுதான் சரி? எது தவறு? இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் ராதாவிடம் கேட்டோம்.
``ஒரு நாளில் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் விதி. அதைப் பிரித்துப் பிரித்து, எத்தனை தடவை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். எந்தத் தவறும் இல்லை. உணவுக்கும் நீருக்குமான தொடர்பென்று பார்த்தால், * சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடிக்கும்போது, உணவின் அளவு குறைந்துவிடும் என்பது உண்மைதான்.
எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், உணவு குறைவாக சாப்பிட்டால் போதும் என நினைப்பவர்கள், ஏதேனும் நோய் பாதிப்பு இருந்து அதற்காக உணவுக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டுமென மருத்துவ பரிந்துரை பெற்றவர்கள் மட்டும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றலாம்.
* சாப்பிடும்போது, இடையிடையே தண்ணீர் குடிப்பது ஆபத்தானது. காரணம், அப்படியானவர்களுக்குச் சாப்பாட்டை உள்ளே தள்ளிவிடும் எக்ஸ்ட்ரா ஃபோர்ஸாக, தண்ணீர் செயல்படுகிறது. இயல்பாக உணவை விழுங்க முடியவில்லை என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி எக்ஸ்ட்ரா ஃபோர்ஸோடு உணவை உடலுக்கு அனுப்பவதென்பது, ஆபத்து.
காரணம், உடல் உணவை இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதென்பது, தொண்டை மற்றும் உணவுக்குழாய் குறித்த சில நோய் பாதிப்புகளின் அறிகுறி. எனவே, இந்தப் பழக்கம் இருப்பவர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.