பள்ளிகளில் இந்தி: வரைவுக் குழுத் தலைவர் கஸ்தூரி ரங்கன் விளக்கம்!
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது.
இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து சென்ற மாதம் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி பாடம் கட்டாயமாக்கப்படும் என தகவல் பரவியது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்தி வராது எனவும், வழக்கம் போல தமிழ், ஆங்கிலம் என இரட்டை மொழி கொள்கையே பின்பற்றப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்தி கட்டாயமாக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இது குறித்து இந்த திட்ட வரைவை உருவாக்கிய கஸ்தூரி ரங்கன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'மும்மொழி கொளகை சர்ச்சைக்குள்ளாவதை நாங்கள் முன்னரே அறிந்திருந்தோம். மொழிக் கொள்கையின் அடிப்படை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது எனக்கு புரிகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த மொழிகளை கற்பிக்கலாம் என அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்' என கஸ்தூரி ரங்கன் விளக்கமளித்துள்ளார்