Friday, June 28, 2019

ஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிக்கல்

திண்டுக்கல், கலந்தாய்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையால், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.ஜூலை 8 முதல் நடக்க உள்ள ஆசிரியர் இடமாறுதலில் கலந்தாய்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருப்போருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டாக நிரப்பப்படாமல், 2018 ஆகஸ்டில் ஒரே நேரத்தில் 1,200 பேருக்கு பதவி உயர்வு வழங்கி காலி பணியிடங்களில் நிரப்பப்பட்டனர்.

பதவி உயர்வுக்காக பலர் வெளி மாவட்டங்களுக்கு சென்றனர். தற்போதைய விதிமுறையால் அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறும்போது, ''தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் பலர் வெளிமாவட்டங்களுக்கு சென்றனர். பதவி உயர்வு ஆணையில் ஒரே பள்ளியில் மூன்று ஆண்டு பணியாற்றினால் மட்டுமே மாறுதல் வழங்கப்படும் என குறிப்பிடப்படவில்லை. எவ்வித நிபந்தனையுமின்றி அவர்கள் சென்றனர். கடந்த காலங்களில், ஓராண்டு ஒரு பள்ளியில் பணியாற்றியவர்கள் அடுத்த கலந்தாய்வில் பங்கேற்று விருப்பமான மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர்.

தற்போதைய அரசாணை அதற்கு முரணாக உள்ளது. விருப்பம் இல்லாமல் வேறு மாவட்டங்களில் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கலந்தாய்வில் திருத்தம் செய்து பதவி உயர்வில் சென்றவர்கள் பங்கேற்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும், என்றார்.

Popular Feed

Recent Story

Featured News