பல்கலைக்கழகங்கள் என்பவை தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. எனவே, ஹிந்தி உள்பட எந்த மொழியையும் கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கூறியுள்ளது.
முன்னதாக, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பி.ஏ. மற்றும் பி.டெக் படிப்புகளில் ஹிந்தியை கட்டாயமாக்க முயற்சி நடப்பதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் ஜேஎன்யு மாணவர்கள் சங்கம் கூறியிருந்தது. இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி எழுதிய கடிதத்தில் அனைத்து இளநிலை படிப்புகளிலும் ஹிந்தியை கற்பிப்பது குறித்து ஆலோசிக்குமாறு கூறியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே ஜேஎன்யுவில் ஆலோசிக்கப்பட்டது என்று விளக்கமளிக்கப்பட்டது.
ஹிந்தி கட்டாயமில்லை: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் முழுமையான தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. பல்கலைக்கழகங்களில் என்ன பாடம் கற்பிக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகங்கள் மட்டுமே முடிவு செய்யும். அதில் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஹிந்தியை பல்கலைக்கழகங்களில் கற்பிப்பது குறித்து யோசனைகளைக் கேட்டு கடந்த 2018 அக்டோபரில் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம் மட்டுமே எழுதியது. அதில் ஹிந்தியை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. ஹிந்தியை கற்பிப்பது குறித்து பல்கலைக்கழகங்களிடம் இருந்து யோசனைகளைப் பெறுவது மட்டுமே அக்கடிதத்தின் நோக்கம். மற்றபடி எதையும் கட்டாயப்படுத்தும் நோக்கமில்லை என்றார்.
மார்க்சிஸ்ட் எதிர்ப்பு: முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், இளநிலை பட்டப் படிப்பில் ஹிந்தி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் யுஜிசி-யின் முயற்சி கவலை அளிக்கிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவில் ஹிந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அந்த அறிவிப்பை நீக்கி திருத்தப்பட்ட கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
எனவே, யுஜிசி தன்னிச்சையாக ஹிந்தி பாடத்தை இளநிலைப் பட்டப் படிப்பில் நுழைக்க முடியாது. யுஜிசி-யின் இந்த சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத் தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும். பல மொழி, கலாசாரம் இருந்தபோதும் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருக்கும் பண்பாட்டை கெடுத்துவிடும். எனவே, யுஜிசியின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும் வகையில், அனைத்து தரப்பு மக்களும், கல்வி அமைப்புகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஜேஎன்யு விளக்கம்: ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இளங்கலைப் படிப்பில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிரமோத் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜேன்யு பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ஹிந்தியைக் கட்டாயமாக்கியுள்ளதாக சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. ஜேஎன்யு நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. பல்கலைக்கழகங்களில் ஹிந்தி கற்பிப்பது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு கருத்துக் கேட்டிருந்தது.
ஜேஎன்யு நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. ஆனால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர் சாய் பாலாஜி கூறுகையில், இளநிலை பட்டப்படிப்பில் ஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டத்தை மாணவர்களின் எதிர்ப்பால் ஜேஎன்யு நிர்வாகம் கைவிட்டுள்ளது. மாணவர் நலனுக்கு எதிராக ஜேஎன்யு துணைவேந்தர், நிர்வாகக் குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார்.