Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 23, 2019

கலை கட்டும் கலை அறிவியல் படிப்புகள்

மாணவர்களின் மேற்படிப்பையும், எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிப்பது பிளஸ் 2 மதிப்பெண்தான். அதனால்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளின் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள்.
பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சேர விரும்பும் படிப்பாக இன்ஜினியரிங் படிப்பு இருந்து வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியல் படிப்புகள் மீது அவர்களின் பார்வை திரும்பத் தொடங்கியிருக்கிறது. இன்ஜினியரிங் கல்லூரியில் சேர எளிதாக இடம் கிடைத்துவிடுகிறது. ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக மாறிவிட்டது. அதுவும், பிகாம், பிபிஏ, பி.ஏ. ஆங்கில இலக்கியம், பிஎஸ்சி வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.


இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலமாக ஒரு லட்சத்து 72 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரம் மட்டுமே. அதிலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்திருந்தவர்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம்பேர் மட்டுமே. கலந்தாய்வுக்கு வருவோரின் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். சுமார் 80 ஆயிரம் பேர் கலந்தாய்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
முன்பு மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர முயற்சி செய்வார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறி கலை அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு விண்ணப்பம் போடுகிற மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகம்.


இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏராளமான மாணவர்கள் வேலையில்லாமல் இருப்பதும், அப்படியே வேலையில் இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் இருப்பதும், மாணவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்பு மீது திரும்ப தொடங்கியிருப்பதற்கு முக்கிய காரணம். தொழிற்கல்வி படிப்புடன் ஒப்பிடும்போது கலை அறிவியல் படிப்புகளுக்கு செலவு மிகவும் குறைவும். இதுவும் ஒரு காரணம்.
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு இணையாக கலை அறிவியல் பட்டதாரிகளுக்கும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. சாதாரணமாக கலை கல்லூரிகளில் பி.ஏ, பி.காம், பிபிஏ, பிஎஸ்சி என்ற பெயரில் பட்டங்கள் வழங்கப்பட்டாலும் தற்போது ஒவ்வொரு படிப்பிலும் பிரத்யேக பாடப்பிரிவுகள் வந்தவண்ணம் உள்ளன. முன்பு பிகாம் என்றால் ஒரே பி.காம் படிப்பு தான். ஆனால், இன்று பி.காம் ஜெனரல், பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பி.காம் கம்ப்யூட்டர் சயின்ஸ்,. பி.காம். இ-காமர்ஸ், பி.காம் கூட்டுறவு என பாடப்பிரிவுகளின் பட்டியல் நீள்கிறது.


தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் அரசுக் கல்லூரிகள் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரி என அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
இக்கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுடன் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்பு, எம்ஃபில், பிஎச்.டி ஆகிய ஆய்வு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இளங்கலை பட்டப் படிப்புகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட படிப்புகளை படிக்கலாம். கலை அறிவியல் கல்லூரிகளில் குறிப்பாக சென்னைப் போன்ற நகர்ப்புற கல்லூரிகளில் பி.காம் படிப்புக்கு எப்போதும் தனி மவுசுதான்.


பி.எஸ்சி. படிப்பில் கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், உளவியல் போன்ற பொதுவான பாடப்பிரிவுகளுடன் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோ-டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், நியூட்ரிசன், அனிமேஷன் டெக்னாலஜி, புள்ளியியல், ஜெர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், விஷூவல் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் மீடியா, டூரிசம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முதலிய சிறப்பு பாடப்பிரிவுகளும் உள்ளன.
அதேபோல், பி.ஏ படிப்பில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல், தத்துவம், கூட்டுறவு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கார்ப்பரேட் எக்கனாமிக்ஸ், பாதுகாப்பு மற்றும் உத்திகள், சுற்றுலா மேலாண்மை, இதழியல், மானுடவியல் என 25-க்கும் மேற்பட்ட படிப்புகள் இருக்கின்றன. இவை தவிர, பிபிஏ, பிபிஎம், பிசிஏ படிப்புகளும் உள்ளன.



இளங்கலைக் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். முதன்மை பாடம் மற்றும் அது தொடர்புடைய பாடங்களில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மட்டுமே பார்க்கப்படும். பிளஸ் 2 தேர்வில் மொத்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இளங்கலை பட்டப் படிப்பை முடிப்பவர்கள் தங்களின் முதன்மை பாடம் அல்லது அதுசார்ந்த இதர பாடப்பிரிவுகளில் மேற்படிப்பு படிக்கலாம். இளங்கலை முடித்தவுடன் பாடம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பதுடன் பட்டப் படிப்பை கல்வித்தகுதியாகக் கொண்டு டிஎன்பிஎஸ்சி, வங்கித்தேர்வு வாரியம், எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி போன்ற தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித்தேர்வெழுதி மத்திய, மாநில அரசு பணிகளிலும் சேரலாம்.

Popular Feed

Recent Story

Featured News