Sunday, June 2, 2019

காவலர் தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்தி அறிவிப்பு


புதுச்சேரியில் 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு வயது வரம்பை உயர்த்தி காவல்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 10ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2018ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடைசியாக 2010ல் காவலர் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிப்பு வெளியானதால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், வயது வரம்பு 22 என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். காவலர் தேர்வுக்காகவே தங்களை தயார் செய்திருந்த நிலையில் வயது கடந்ததால் பெரிதும் மனமுடைந்தனர்.



எனவே, வயது வரம்பை தளர்த்தக்கோரி மாணவர் கூட்டமைப்பினர் பல போராட்டங்கள் நடத்தினர். முதல்வர், கவர்னர், தலைமை செயலர், டிஜிபியிடம் மனுக்கள் அளித்தனர். மத்திய தீர்ப்பாயத்திலும் முறையிட்டனர்.

சட்டசபையில் இப்பிரச்னையை திமுக எம்எல்ஏ சிவா எழுப்பினார். அப்போது வயது வரம்பு உயர்த்தப்படும் என முதல்வர் உறுதியளித்தார். தொடர்ந்து, இதற்கான கோப்பை கவர்னரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பியது.

ஆனால் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி, மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார். இவ்விஷயத்தில் அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உள்துறை கூறியதையடுத்து கவர்னர் தற்போது ஒப்புதல் அளித்தார்.



3 நாட்களுக்கு முன் முதல்வர் நாராயணசாமி, காவலர் தேர்வுக்கான வயது உச்சவரம்பு 22ல் இருந்து 24 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் காவலர் தேர்வுக்கு வயது வரம்பை 22ல் இருந்து 24ஆக உயர்த்தி காவல்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 22-9-2018ம் தேதியின் அடிப்படையில் வயது கணக்கிடப்படும். பிளஸ் 2 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி ஆகிய பிரிவினருக்கு மேலும் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.

அதாவது 27 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல், எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 29 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வின் மூலம் எஸ்சி பிரிவினர் 34 வயது வரையிலும், எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசி, எம்பிடி பிரிவினர் 32 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். காவல்துறையின் police.py.gov.in என்ற இணையதள முகவரியில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.



வரும் 10ம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 9ம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular Feed

Recent Story

Featured News