கூகுள் மேப்ஸ் நிறுவனம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கு ஏற்ப 3 புதிய வசதிகளை குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்கிறது. இன்றைய நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன்மூலம் மக்களுக்குப் பயன்படும் பல வழிமுறைகளை நிறுவனங்கள் சில தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் கூகுள் மேப்ஸ் நிறுவனம் இந்தியாவில் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கு ஏற்ப 3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
முதலாவதாக, போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கும் வகையில் சாலை போக்குவரத்தின் தற்போதைய நிலைமை, சாலையை கடக்க ஆகும் நேரம் உள்ளிட்ட சில விஷயங்கள் சிவப்பு குறியீட்டில் சுட்டிக்காட்டப்படும். இந்த வசதி, சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைமுறைக்கு வருகிறது. அடுத்ததாக, ஒரு குறிப்பிட்ட ரயில் எங்குப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கூகுள் மேப்பிலேயே அறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயில் எப்போது நாம் இருக்கும் பகுதிக்கு வரும், எவ்வளவு நேரமாகும் உள்ளிட்ட விஷயங்களை வேர் இஸ் மை ட்ரெயின் என்ற ஆப்பை டவுன்லோடு செய்து பயன் பெறலாம். இறுதி பயன்பாடாக, பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், பேருந்திலிருந்து எந்த இடத்தில் இறங்கினால், ஆட்டோ அல்லது மெட்ரோ ரயில் வசதி கிடைக்கும் என்றும் அதற்கான நேரம், தூரம், கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம். இந்த வசதியானது முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.