Sunday, June 2, 2019

தலைமைச் செயலக ஊழியர்கள் வேட்டிகளையும் அணியலாம்



தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வேட்டிகளையும் தலைமைச் செயலக ஆண் ஊழியர்கள் அணியலாம் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அணிய வேண்டிய உடைகள் குறித்த உத்தரவை அவர் வெள்ளிக்கிழமை பிறப்பித்திருந்தார். அதில், ஆண் ஊழியர்களுக்கான உடைகளின் பட்டியலில் வேட்டி என்ற வார்த்தை இடம்பெறாமல் இருந்தது. இந்நிலையில், ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவைத் திருத்தி அவர் சனிக்கிழமை வெளியிட்ட புதிய உத்தரவு விவரம்:
தலைமைச் செயலக அலுவலகங்களில் மாண்பைக் காக்கும் வகையில் சுத்தமான, ஆடைகளை அரசு ஊழியர்கள் அணிய வேண்டும். அதில், பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கம்மீஸ், சுடிதார் போன்ற உடைகளுடன் துப்பட்டா அணியவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.


இதேபோன்று, ஆண் ஊழியர்கள் பேண்ட் மற்றும் சட்டைகளை மட்டுமே அணிய கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். அதில், ஆண்களைப் பொருத்தவரையில் தமிழக கலாசாரம் அல்லது இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் எந்த உடைகளையும் அணியலாம். குறிப்பாக, தமிழக கலாசாரத்தை எதிரொலிக்கும் வேட்டிகளை அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தலைமைச் செயலாளர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியிடப்பட்ட உத்தரவில், வேட்டி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்று செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில், ஆண்களின் உடைப் பட்டியலில் வேட்டியும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News