மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள மருத்துவப்படிப்பிற்கான காலியிடங்களில் 85 சதவிகித இடங்கள் மாநில அரசுகள் மூலமாகவும், மீதமுள்ள 15 சதவிகிதம் மத்திய அரசின் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அகில இந்திய அளவில் 15 சதவிகித மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 24ம் தேதி வரையில் இக்கலந்தாய்வு நடைபெறும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்போர் நீட் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதாரர்கள் 40 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் mcc.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போதே மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களைப் பதிவு செய்யவேண்டும். இதனையடுத்து மருத்துவக்கல்லூரிகளில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில், 25ம் தேதி இறுதியாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை அவர்களுக்கு ஒதுக்கும் பணிகள் 26ம் தேதி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:- mcc.nic.in என்னும் அதிகாரப்பக்கத்துக்குச் செல்ல வேண்டும். அதில் UG Medical Counseling என்னும் பிரிவை கிளிக் செய்ய வேண்டும். தற்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து விட்டு உள்நுழைய வேண்டும். புதிதாகப் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் New Registration என்று இடது புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, புதிய கணக்கு தொடங்க வேண்டும். அங்கே, மாணவர்கள் தங்களது சுயவிவரங்கள், கல்வி விபரங்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்தி நிறைவு செய்ய வேண்டும்.