Tuesday, June 4, 2019

மருத்துவப் படிப்புக்கு பொது இறுதித் தேர்வு: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தம்

மருத்துவப் படிப்பை நிறைவு செய்ய பொது இறுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய விதி, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் குழு அந்த விதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக, கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வரைவு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதுபோல், மருத்துவப் படிப்பை நிறைவு செய்வோருக்கு நான்காம் ஆண்டு படிப்பின்போது பொது இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்வை இரு காரணங்களுக்காக பயன்படுத்தலாம்.


மருத்துவப் படிப்பை முடித்தோர் அடுத்ததாக மருத்துவத் தொழிலில் ஈடுபடுவதற்கான தகுதித்தேர்வாக அந்தத் தேர்வை கருதலாம். அதேபோல், முதுநிலை மருத்துவக் கல்வி படிக்க விரும்புவோருக்கான நுழைவுத் தேர்வாகவும் அதை கணக்கில் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்தப் பரிந்துரை தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் ஒரு விதியாக சேர்க்கப்பட்டது.
இதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் திருத்தப்பட்ட மசோதாவில் இருந்து அந்த விதி நீக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News