புதுக்கோட்டை,ஜூன்,4, தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்2-க்கும் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற இருக்கிறது.இதனையொட்டி புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் ஆசிரியர் தகுதித்தேர்விற்காக நியமிக்கப்பட்டுள்ள முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்,கூடுதல் துறை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது: தேர்வுக்கு முதல் நாளன்று முதன்மைக்கண்காணிப்பாளர் துறை அலுவலருடன் இணைந்து தேர்வு மையத்தைப் பார்வையிட்டு தளவாட வசதி,குடிநீர் வசதி,தேர்வு அறைகளை ஆய்வு செய்யவேண்டும்.அறை கண்காணிப்பாளருடன் தொடர்பு கொண்டு தேர்வு பணி உள்ளதை தெரிவித்து உறுதிசெய்தல் வேண்டும்.காவல் துறையினரிடம் தொடர்பு கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ள தெரிவிக்கவேண்டும். தேர்வு நாளன்று முதன்மைக்கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் தேர்வு மையத்திற்கு காலை 7.00மணிக்குள் வருகை தரவேண்டும். தேர்வு மையத்தில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருந்து வழித்தட அலுவலரிடமிருந்து வினாத்தாள் கட்டுக்கள் மற்றும் ஓ.எம்.ஆர் படிவத்தினை பெற்றுக்கொண்டு இரும்பு அலமாரியில் பாதுகாப்பாக வைத்து பூட்டப்படவேண்டும். தேர்வு மையத்தில் மொத்த மாணவர்களில் மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் எத்தனை பேர் என கணக்கிட்டு அவர்களுக்கு தரைதளத்தில் அறை ஒதுக்கப்பட வேண்டும்.
அறை கண்காணிப்பாளர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரவேண்டும்.முதன்மைக்கண்காணிப்பாளர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறை கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.அறை கண்காணிப்பாளர் அலைபேசியை தேர்வு அறைக்கு எடுத்துச்செல்லக்கூடாது.தேர்வர்களை சரியாக சோதனை செய்து தேர்வறைக்குள் அனுமதிக்கவேண்டும்.தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அலைபேசி,பேஜர்,டிஜிட்டல் டையரி மற்ற எலக்ரானிக் உபகரணங்கள் அனுமதி இல்லை.தேர்வர்கள் கைக்குட்டை கொண்டு வரக்கூடாது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு இரண்டு ஊதா அல்லது இரண்டு கருப்பு பந்துமுனை பேனாக்களை மட்டுமே கொண்டுவரவேண்டும். தேர்வர்களின் புகைப்படம் ஓ.எம்.ஆர் படிவத்தில் தெளிவாக இருக்கவேண்டும். தேர்வு காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.20மாணவர்கள் ஓர் அறைக்கு அனுமதிக்கப்படுவர்.
சொல்வதைக் கேட்டு எழுதக்கூடிய மாணவர்களை தனி அறையில் ஒதுக்கீடு செய்யவேண்டும்.முதன்மைக்கண்காணிப்பாளர்,துறை அலுவலர் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரிடமும் இம்மையத்தில் உறவினர்கள் யாரும் தேர்வு எழுதவில்லை என சான்று வழங்கவேண்டும்.ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பெல் அடிக்கவேண்டும்.முதன்மைக்கண்காணிப்பாளர் காலை10.30 மணியளவில் தேர்வு மையத்திற்கு வருகை புரியாத தேர்வர் விவரம் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கவேண்டும். தேர்வு மையத்தின் வெளியே ஒட்டப்படும் பட்டியலில் தேர்வர்களின் பதிவெண் விவரம் மட்டுமே குறிப்பிடவேண்டும்.பெயர் மற்றும் பிறந்த தேதி ஏதும் எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது.அறிவிப்பு பலகையில் தேர்வு அறைக்குள்ளே வெளியே ஒட்ட பயன்படுத்தக்கூடாது. ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்துவதற்குரிய அனைத்து விதிமுறைகளையும் தவறாது பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வினை சிறப்பாக நடத்தவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எஸ். ராகவன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) கே.திராவிடச்செல்வம்,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்,கூடுதல் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.