Friday, July 5, 2019

1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள்: கணக்கெடுப்பில் தகவல்

தமிழகத்தில் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற மாணவர்களும் கல்வி பயிலவேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.
இந்தநிலையில் தொடக்கக் கல்வித்துறை எடுத்த கணக்கெடுப்பில், 45 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லை, 76 பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 82 பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்கள் என மொத்தம் 1,848 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருகின்றனர்.


மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தப் பள்ளியின் பட்டியல்களை ஓரிரு நாள்களுக்குள் பெறுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1,848 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அதில், பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளின் விவரங்கள், இரண்டு பள்ளிகளுக்குமான தொலைவு , மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவுள்ள வசதி, விவரம் மற்றும் சிரமங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இரு பள்ளிகளுக்கிடையில் ஆறுகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் உள்ளதா என தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கடந்த மாதம் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் ஒரு மாணவர் கூட இல்லாததால் நான்கு பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பள்ளிகள் மூடப்பட்டதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முற்றிலும் மறுப்பு தெரிவித்தார். மாணவர் வருகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் பள்ளிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூட வாய்ப்பில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பத்துக்கும் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது

Popular Feed

Recent Story

Featured News